நைஸ் ரோடு திட்டம்; ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதா கட்சிகள் கூட்டாக போராட முடிவு
|நைஸ் ரோடு திட்டம் குறித்து அரசு விசாரிக்க வலியுறுத்தி ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் கூட்டாக போராட முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
நைஸ் ரோடு திட்டம் குறித்து அரசு விசாரிக்க வலியுறுத்தி ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் கூட்டாக போராட முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
விதைப்பு பணிகள்
கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் யு.டி.காதர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை கடந்த 19-ந் தேதி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்று 2-வது நாளாக பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். விவசாயிகள் 2 முறை விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் மழை வராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளை பாதுகாக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லை. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
உத்தரவாத திட்டங்களுக்கு நிதி
நாங்கள் எங்களின் பட்ஜெட்டில் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, பள்ளி குழந்தைகளுக்கு தனி பஸ் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தோம். அந்த திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. போலீசார் மாமூல் வசூலிக்கிறார்கள். மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள இந்த அரசு, உத்தரவாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தடுமாறுகிறார்கள்.
முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் கடன் பெறப்பட்டது. இதனால் மாநிலத்தின் கடன் அதிகரித்தது. தலித் மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளனர். கிரகலட்சுமி திட்டத்திற்கு அந்த நிதியை ஒதுக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலித் மற்றும் பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் இதுபற்றி கேள்வி கேட்காமல் மவுனம் காக்கிறார்கள்.
மின் கட்டணம்
இந்த அரசு தலித் மக்களின் விரோத அரசு. ஊழலில் சித்தராமையா அரசு முதல் இடத்தில் உள்ளது. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் கைமாறுகிறது. மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். இதனால் மக்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் நாங்கள் சிறப்பான முறையில் நிதி நிர்வாகத்தை மேற்கொண்டோம். அதனால் தான் காங்கிரஸ் அரசு இவ்வளவு பெரிய தொகைக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு கர்நாடகத்திற்கு ரூ.3,500 கோடி நிதி வழங்கியது. பெங்களூருவில் நைஸ் ரோடு திட்டத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்த திட்டம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
திரும்பி பெற...
இந்த நைஸ் ரோடு திட்டத்திற்கு கூடுதலாக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற வேண்டும் என்று மந்திரிசபை துணை குழுவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.