< Back
தேசிய செய்திகள்
ஜெயின் துறவி கொலை விவகாரம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. கடும் அமளி
தேசிய செய்திகள்

ஜெயின் துறவி கொலை விவகாரம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. கடும் அமளி

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

ஜெயின் துறவி கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியும், அரசு அதிகாரிகள் பணியிடமாற்றத்துக்கு பணம் கைமாறி இருப்பதாக குற்றம்சாட்டியும் சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதி களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதையடுத்து சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த நிலையில் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்திற்கு சபாநாயகர் யு.டி.காதர் அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் பெலகாவியில் ஜெயின் துறவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி சட்டசபையில் பா.ஜனதா கோரிக்கை வைத்தது. மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டது. ஆனால் மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வர் போலீசாரின் விசாரணை நடந்து வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என்று நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் சட்டசபையின் 7-வது நாள் கூட்டத்தொடர் நேற்று நடந்தது.

முதலில் பூஜ்ஜிய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது போலீஸ் மந்திரி பரமேஸ்வர், ஜெயின் துறவி காமகுமார நந்தி மகாராஜா கொலை குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

பெலகாவியில் ஜெயின் துறவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நான் பெலகாவியில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு நேரில் சென்றேன். கொலையான 6 மணி நேரத்தில் தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிக விரைவாக உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள். கர்நாடக போலீசாருக்கு இதுகுறித்து விசாரிக்க திறன் இல்லையா?.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்நாடக போலீசார் திறமையானவர்கள் என்று நீங்களே(பா.ஜனதாவினர்) கூறினீர்கள். இப்போது நமது(கர்நாடக) போலீசாரின் திறமை மீது உங்களுக்கு சந்தேகம் ஏன்?. இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்கும் திறன் நமது போலீசாருக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். அதனால் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 'இந்த வழக்கு விசாரணையில் தொடக்கத்திலேயே சில தவறுகள் நடந்துள்ளன. போலீசார் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அழுத்தம் வந்த பிறகே போலீசார் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் போலீசாரின் விசாரணையை நம்ப நாங்கள் தயாராக இல்லை. இந்த வழக்கில் உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.

அப்போது பதிலளித்த முதல்-மந்திரி சித்தராமையா, 'ஜெயின் மத துறவி கொலையில் போலீசார் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஒருவேளை போலீசார் ஏதாவது தவறு செய்திருந்தால், அத்தகையவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை. கர்நாடக போலீசாரே விசாரிப்பார்கள்' என்றார்.

போலீஸ் மந்திரியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி பா.ஜனதா உறுப்பினர்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் கடும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் சபையில் பரபரப்பும், கூச்சல்-குழப்பமும் நிலவியது. இதையடுத்து சபையை சபாநாயகர் யு.டி.காதர் 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

முன்னதாக பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால், 'விஜயாப்புரா மாநகராட்சி கமிஷனராக தகுதி இல்லாத அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது சரியல்ல. எந்தெந்த மாநகராட்சிகளுக்கு எந்த 'கேடர்' அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இதை மீறி நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி சுரேஷ் தகுதியற்ற அதிகாரியை நியமித்துள்ளார். இதில் பண பரிமாற்றம் நடந்திருக்கும். அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் பண பரிமாற்றம் நடப்பதாக பேசப்பட்டு வருகிறது. பணி இடமாற்றம் ஒரு வியாபாரத்தை போல் நடத்துகிறார்கள்' என்றார்.

அப்போது முதல்-மந்திரி சித்தராமையா குறுக்கிட்டு பேசும்போது, 'விஜயாப்புரா மாநகராட்சி கமிஷனர் அந்த பதவிக்கான தகுதி இல்லாதவர் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அதை என்னவென்று நாங்கள் பார்க்கிறோம். ஆனால் பணி இடமாற்றத்தில் வியாபாரம் நடப்பதாக கூறுவது சரியல்ல. பூஜ்ஜிய நேரத்தில் விரிவாக விவாதிக்க அனுமதி இல்லை' என்றார்.

இதற்கு பதிலளித்த நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி சுரேஷ், 'நாங்கள் விஜயாப்புரா மாநகராட்சிக்கு கே.ஏ.எஸ்.(கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வானவர்) அதிகாரியை தான் நியமனம் செய்துள்ளோம். இதில் நான் வியாபாரம் செய்வதாக பசவனகவுடா பட்டீல் யத்னால் கூறியுள்ளார். நான் அவ்வாறு எந்த வியாபாரமும் செய்யவில்லை. எனக்கு அவ்வாறு வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வேண்டுமானால் இத்தகைய வியாபாரம் செய்வார்' என்றார்.

அப்போது பேசிய துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், 'அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது என்பது அரசுக்கு உள்ள அதிகாரம். இதில் எந்த வியாபாரமும் இல்லை. பா.ஜனதாவில் முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி வழங்க வேண்டும் என்று நீங்கள் பேசினீர்களே. அதனால் உங்களின் பேச்சை கேட்க நாங்கள் தயாராக இல்லை. நான் மட்டும் கட்சி தலைவராக இருந்திருந்தால் உங்களை இந்த கருத்துக்காக உடனடியாக நீக்கி இருப்பேன். டிஸ்மிஸ் செய்திருப்பேன்' என்றார்.

தனது கேள்விக்கு அரசு தரப்பில் சரியான பதிலளிக்கவில்லை என்று கூறி பசனகவுடா பட்டீல் யத்னால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தன்னிச்சையாக தர்ணா நடத்தினார். அதைத்தொடர்ந்து அவருக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் ஆதரவாக வந்து நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் குரலை உயர்த்தி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபாநாயகர் யு.டி.காதர், சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

சபை பிறகு மீண்டும் கூடியது. அப்போதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். சபாநாயகர் யு.டி.காதர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் தர்ணாவை கைவிட்டு தங்களின் இருக்கைக்கு திரும்பினர். அப்போது மீண்டும் பேசிய மந்திரி பைரதி சுரேஷ், 'விஜயாப்புரா மாநகராட்சி கமிஷனர் நியமனம் குறித்து என்னவென்று பார்க்கிறேன். அவரது நியமனம் சட்டப்படி சரியாக இருந்தால் அவரையே தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்போம். ஒருவேளை அது சட்டவிரோதம் என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட முறையில் பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கும், எனக்கும் இடையே எந்த விரோதமும் இல்லை' என்றார். அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்