'இந்தியா' இல்லை; இனி 'பாரத்' தான் : டுவிட்டர் பயோவில் அசாம் முதல்-மந்திரி அதிரடி
|டுவிட்டர் பயோவில் இருந்த இந்தியா என்பதை பாரத் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா மாற்றியுள்ளார்.
திஸ்பூர்,
அஸ்ஸாம் முதல்-மந்திரியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, எதிர்கட்சிக் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (INDIA) என மறுபெயரிடப்பட்டது குறித்து விமர்சனம் செய்தார்.
எதிர்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என்று பெயர் வைக்கப்பட்டநிலையில் அது ஆங்கிலேயர்கள் அளித்த பெயர் என்று ஹிமந்த சர்மா விமர்சித்துள்ளார்.
இந்தியா என மறுபெயரிட்டது காலனித்துவ (ஆங்கிலேய) மரபுகளின் அடையாளம் என்றும், இந்த மரபுகளிலிருந்து தேசத்தை விடுவித்து பாரதத்திற்காக உழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். பாரதத்திற்காக பா.ஜ.க." என்று அதில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளார்.