< Back
தேசிய செய்திகள்
கர்நாடக இறையாண்மைக்கு அச்சுறுத்தல் - சோனியா காந்தியின் கருத்துக்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்..!
தேசிய செய்திகள்

'கர்நாடக இறையாண்மைக்கு அச்சுறுத்தல்' - சோனியா காந்தியின் கருத்துக்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்..!

தினத்தந்தி
|
8 May 2023 5:25 PM IST

'கர்நாடக இறையாண்மைக்கு அச்சுறுத்தல்' என்ற சோனியா காந்தியின் கருத்துக்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

புதுடெல்லி,

"கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது" என்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கு எதிராக பாஜக புகார் அளித்துள்ளது.

கர்நாடகாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிலையில் சோனியா காந்தியின் இந்த கருத்துக்கள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இதற்காக சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே, தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

"இறையாண்மையின் வரையறை என்பது ஒரு சுதந்திர நாடு. இந்தியா இறையாண்மை கொண்ட நாடு, கர்நாடகம் அதில் பெருமை கொள்கிறது. காங்கிரசின் கருத்து அதிர்ச்சிகரமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவில் இருந்து கர்நாடகம் தனியானது என்று காங்கிரஸ் நம்புகிறது.

காங்கிரசின் இந்த கருத்தானது குடிமக்களை பிளவுபடுத்தும் வகையிலும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இருவருக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து கர்நாடகம் வேறுபட்டதல்ல. இந்த கருத்து பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளது.

எனவே இத்தகைய கருத்தை தெரிவித்த சோனியா காந்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவும், முன்மாதிரியான தண்டனை நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் கூறும்போது, "சோனியா காந்தி வேண்டுமென்றே இறையாண்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு தேச விரோத செயல். இந்த தேச விரோத செயலுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்