< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. பெண் எம்.பி. மீது சுரங்க மாபியா கும்பல் லாரி ஏற்றி கொல்ல முயற்சி
தேசிய செய்திகள்

பா.ஜ.க. பெண் எம்.பி. மீது சுரங்க மாபியா கும்பல் லாரி ஏற்றி கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
8 Aug 2022 9:26 AM IST

சுரங்க மாபியா கும்பல் தனது கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, லாரி ஏற்றி கொல்ல முயற்சித்தது என கூறி பா.ஜ.க. எம்.பி. ரஞ்ஜீதா கோலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பரத்பூர்,

அரியானாவில் நூ மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுரங்க பணிகளை விசாரிக்க சென்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் கடந்த ஜூலை 19ந்தேதி லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. டி.எஸ்.பி.யின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு, ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்-மந்திரி கட்டார் அறிவித்ததுடன், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் குற்றவாளி ஒருவர் கூட தப்ப முடியாது எனவும் கூறினார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் சுரங்க மாபியா கும்பல் தனது கார் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தியதுடன், லாரி ஏற்றி கொல்ல முயற்சித்தது என பா.ஜ.க. எம்.பி. ரஞ்ஜீதா கோலி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

போலீசார் தனது புகார் மீது எந்தவித கவனமும் செலுத்தவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சியினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து கொண்டனர். வாகனம் ஏற்றி கொல்ல முயற்சித்தவர்கள் எம்.பி.யின் கார் மீது கற்களையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதுபற்றி எம்.பி. கோலி கூறும்போது, 150 லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தன. அதனை கவனித்த நான், அவற்றை நிறுத்த முயன்றேன். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர். காரில் நான் இருக்கிறேன் என நினைத்து கார் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதில், காரின் கண்ணாடிகள் உடைந்து விட்டன. அவர்கள் என்னை கொலை கூட செய்திருக்கலாம். இது என் மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஆனால், இதற்கெல்லாம் பயப்படமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

சம்பவம் பற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு ஆர்.எஸ். கவியா கூறும்போது, அந்த எம்.பி. இரவில் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். அவர் டெல்லியில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது, அதிக சுமையேற்றி கொண்டு வந்த லாரிகளை பார்த்துள்ளார். அவற்றை நிறுத்த முயற்சித்து உள்ளார்.

மூன்று லாரிகள் நின்றுள்ளன. மற்றவை தப்பி சென்று விட்டன. அப்படி செல்லும்போது, கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு சென்றனர் என அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். பா.ஜ.க. பெண் எம்.பி. மீது கடந்த மே மாதம் மற்றும் கடந்த வருடம் உள்பட கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்