< Back
தேசிய செய்திகள்
சந்தேஷ்காளி நோக்கி சென்ற பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்திய போலீஸ்
தேசிய செய்திகள்

சந்தேஷ்காளி நோக்கி சென்ற பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்திய போலீஸ்

தினத்தந்தி
|
16 Feb 2024 2:02 PM IST

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானுக்கு எதிராக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

பல கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ரேஷன் வினியோக ஊழல் தொடர்பாக ஷேக் ஷாஜகானின் வீட்டில் ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போதுதான் சந்தேஷ்காளியில் பிரச்சினை ஆரம்பமானது. ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அன்று முதல் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார்.

இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பா.ஜ.க. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சட்டமன்றத்திலும் பிரச்சினை எழுப்பியது. கவர்னர் நேரில் சென்று பெண்களிடம் விசாரித்ததுடன், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் சந்தேஷ்காளி கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேஷ்காளியில் நடந்தது என்ன? என்பதை கண்டறிவதற்காக பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒரு குழுவை அமைத்துள்ளார். சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று திரிணாமுல் தலைவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய பெண்களை சந்தித்து பேசி, அவர்கள் கூறும் தகவல்கள் மற்றும் கள நிலவரம் ஆகியவற்றை அறிக்கையாக வழங்கும்படி அந்த குழுவினரை கேட்டுக்கொண்டார்.

அதன்படி 6 பேர் கொண்ட பா.ஜ.க. குழுவினர் இன்று சந்தேஷ்காளி நோக்கி புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு சென்றால் போராட்டம் தீவிரமடைந்து சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் அவர்களை போலீசார் ராம்பூரில் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சந்தேஷ்காளி விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான நில அபகரிப்பு புகார், பாலியல் புகார் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்