< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. ஆட்சி மன்றக்குழுவில் இருந்து கட்காரி, சவுகான் நீக்கம்: வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி
தேசிய செய்திகள்

பா.ஜ.க. ஆட்சி மன்றக்குழுவில் இருந்து கட்காரி, சவுகான் நீக்கம்: வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி

தினத்தந்தி
|
18 Aug 2022 5:23 AM IST

பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழுவில் இருந்து நிதின் கட்காரியும், சிவராஜ் சிங் சவுகானும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழுவில் இருந்து நிதின் கட்காரியும், சிவராஜ் சிங் சவுகானும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக 6 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது.

2 தலைவர்கள் நீக்கம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வில் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பு 'பார்லிமென்டரி போர்டு' என அழைக்கப்படுகிற ஆட்சிமன்றக்குழுதான். இதுதான் கட்சியின் கொள்கைகள் போன்றவற்றில் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

இத்தகைய அதிக அதிகாரமிக்க அமைப்பில் இருந்து பா.ஜ.க. மூத்த தலைவர்களான மத்திய மந்திரி நிதின் கட்காரியும், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

6 பேருக்கு இடம்

அதே நேரத்தில் 6 புதுமுகங்களுக்கு பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக்குழுவில் இடம் தரப்பட்டுள்ளது. அவர்கள் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, இக்பால் சிங் லால்புரா, மத்திய மந்திரி சர்வானந்த சோனாவால், கே. லட்சுமன், சுதா யாதவ் மற்றும் சத்யநாராயண் ஜாட்டியா ஆவார்கள்.

இவர்களில், இக்பால் சிங் லால்புரா, பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழுவில் இடம் பிடித்திருக்கும் முதல் சீக்கியவர் ஆவார். கே.லட்சுமன், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசியத்தலைவர் ஆவார். சுதா யாதவ், அரியானா மாநிலத்தை சேர்ந்தவர், கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். சத்தியநாராயண் ஜாட்டியா, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். வாஜ்பாய் அரசில் மந்திரி பதவி வகித்தவர் ஆவார்.

பா.ஜ.க. ஆட்சி மன்றக்குழுவில் பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய மந்திரிகள் அமித் ஷாவும், ராஜ்நாத் சிங்கும் இடம் பெற்றுள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு பதவி

பா.ஜ.க. வின் மத்திய தேர்தல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ், ஓம் மாத்தூர் (ராஜஸ்தான்), பா.ஜ.க. மகளிர் அணி தலைவரான தமிழ்நாட்டின் வானதி சீனிவாசன் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய தேர்தல் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஷா நவாஸ் உசேனும், ஜூவல் ஓரமும் நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு தயாராகிறது

2024-ம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு பா.ஜ.க. இப்போதே தயாராகத் தொடங்கி உள்ளது என்பதற்கு கட்சியில் செய்யப்படுகிற அதிரடி மாற்றங்கள் சான்றாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் செய்திகள்