< Back
தேசிய செய்திகள்
இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை பா.ஜ.க.வினர் புரிந்து கொள்ளவில்லை - ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

'இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை பா.ஜ.க.வினர் புரிந்து கொள்ளவில்லை' - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
3 July 2024 4:37 PM IST

இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை பா.ஜ.க.வினர் புரிந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்பும் பா.ஜ.க.வினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல், பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் பற்றிய எனது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பா.ஜ.க.வினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை.

பா.ஜ.க.வின் பொய்களை குஜராத் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு, அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். நான் மீண்டும் சொல்கிறேன், குஜராத்தில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்