< Back
தேசிய செய்திகள்
ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது - ராகுல் காந்தி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது' - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
20 Jan 2024 6:35 PM IST

மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கிய அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.

இட்டாநகர்,

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில், நடை பயணமாகவும், பேருந்திலும் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கிய அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.

அவர் தோய்முக் பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது அப்பகுதி மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசுகையில், 'ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்க பார்க்கிறது. மக்களை தங்களுக்குள் சண்டையிட தூண்டுகிறது. ஆளும் பாஜக அரசு மக்களின் நலனுக்காக பாடுபடமால் ஒரு சில தொழில் அதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறது.

மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுகிறது. இந்த 6,713 கிமீ நீளமுள்ள 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மணிப்பூரில் இருந்து கடந்த 14 ஆம் தேதி தொடங்கி வருகிற மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் முடிவடைகிறது, இது வடகிழக்கு மாநில மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'அருணாச்சல பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது. யாத்திரையின் போது, நான் காலை முதல் மாலை வரை பல மணி நேரம் பயணித்து, மக்களின் வேதனைகளையும், துன்பங்களையும் கேட்டு வருகிறேன்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்