மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாத பா.ஜ.க. எம்.பி.க்கு அபராதம்
|டெல்லியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை ஓராண்டுக்கு கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக, ஹர் கர் திரங்கா எனப்படும் ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்றுங்கள் என்ற பிரசாரம் மத்திய அரசால் முன்னெடுத்து செல்லப்படுகிறது.
இதன்படி, டெல்லி செங்கோட்டையில் இருந்து பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். இதில், பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரியும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணியில் பங்கேற்ற பலர் ஹெல்மட் அணிந்து சென்றனர். இதில், செந்நிற புல்லட் வண்டி ஒன்றில் புறப்பட்ட பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி, உள்ளிட்ட சிலர் ஹெல்மெட் அணியாமல் சென்றனர்.
இதனை தொடர்ந்து டெல்லி போக்குவரத்து போலீசார், எம்.பி. திவாரிக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்து உள்ளனர். வாகன உரிமையாளருக்கு தனியாக அபராதம் ஒன்றும் விதிக்கப்பட்டது.
இதுபற்றி மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார். அபராத தொகையையும் தானே செலுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.
அந்த பதிவில், ஹெல்மெட் அணியாததற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அபராத தொகையை நான் செலுத்தி விடுகிறேன் என டெல்லி போக்குவரத்து போலீசாருக்கு தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்புடன் ஓட்டுங்கள். உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள் என்று அதில் தெரிவித்து உள்ளார்.