ராகுல்காந்தி கருத்தால் ஒட்டுமொத்த நாடும் கோபமாக உள்ளது - மத்திய மந்திரிகள் குற்றச்சாட்டு
|நாட்டின் ஜனநாயகம் மோசமாக இருப்பதாக காட்டி, வெளிநாடுகளின் தலையீட்டை கோருவது கடுமையான குற்றம் என்று ராகுல்காந்தி மீது மத்திய மந்திரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
பியூஸ் கோயல் கூறியதாவது:-
ராகுல்காந்தி லண்டனில் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் அடிப்படையற்றவை. அதைக்கேட்டு, ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. நாடாளுமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அவர் இழிவுபடுத்தி விட்டார். தனது செயலுக்கு சிறிதும் வருந்தாமல், ஏதோ பெரிய தேசபக்த காரியத்தை செய்ததுபோல் அவர் நடந்து கொள்கிறார். அவர் முதலில் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கடுமையான குற்றம்
நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
இதற்கு முன்பு இந்தியாவின் நற்பெயர் மீது இந்த அளவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை. அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் ஜனநாயகம் மோசமாக இருப்பதாக காட்டி, வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை கோருவது போன்ற கடுமையான குற்றம் வேறு இல்லை.
ஜனநாயகத்தின் தாய் என்று உலகமே ஒப்புக்கொண்ட இந்தியாவை ராகுல்காந்தி இழிவுபடுத்தி இருக்கிறார். அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடும், எம்.பி.க்களும் கேட்கிறார்கள். ஆனால், மன்னிப்பு கேட்காமல், காங்கிரஸ் குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.
மூத்த தலைவர்கள் பலர் மன்னிப்பு கேட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், ராகுல்காந்தி நாடாளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்தி வருகிறார் என்று அவர் கூறினார்.
3 மாநில தேர்தல் தோல்வி
பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராகுல்காந்தி இழிவுபடுத்திய ஜனநாயகம்தான் அவரை வயநாடு தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்தது. சமீபத்தில், இமாசலபிரதேசத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியது.
ஆனால், 3 வடகிழக்கு மாநிலங்கள் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன், ராகுல்காந்தி ஜனநாயகத்தை இழிவுபடுத்துகிறார் என்று அவர் கூறினார்.