மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை பா.ஜனதா பாதுகாக்கிறது - காங்கிரஸ் கண்டனம்
|மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை பா.ஜனதா பாதுகாப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய நாடாளுமன்றம் நோக்கி நேற்று முன்தினம் பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தபோது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.பி.யை மத்திய அரசு பாதுகாப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக டெல்லியில் 16 வயது சிறுமி குத்திக்கொலை செய்யப்பட்டது போன்ற குற்றங்கள் அதிகரிக்க இது வழிவகுக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதா எம்.பி. (பிரிஜ்பூஷண் சிங்) மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அத்தகைய நபர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா இருக்கிறது. இவ்வாறு அரசே தங்களுடன் நிற்கும் என்று நம்புவதால் குற்றவாளிகள் ஊக்கமடைகிறார்கள்' என குற்றம் சாட்டினார்.
பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகளின் புகைப்படங்களை பா.ஜனதா ஐ.டி. துறையினர் தவறாக சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள லம்பா, இதன் மூலம் தேசத்துக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளின் நடத்தையை களங்கப்படுத்த முயற்சிப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்.