காங்கிரஸ் அரசை கண்டித்து சட்டசபையில் பா.ஜனதா கடும் அமளி; சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம்
|வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா கடும் அமளியில் ஈடுபட்டது. அவர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் யு.டி.காதர் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கினார். இதில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் சிவலிங்கேகவுடா கேள்வி கேட்டார். அதற்கு சம்பந்தப்பட்ட மந்திரி பதிலளித்தார்.
அப்போது முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறுக்கிட்டு, காங்கிரஸ் மக்களுக்கு வழங்கிய 5 உத்தரவாத திட்டங்கள் குறித்த வாக்குறுதி பற்றி விவாதிக்க நாங்கள்(பா.ஜனதா) தீர்மானம் ஒன்றை கொடுத்துள்ளோம். அதுகுறித்து முதல்கட்ட கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சபாநாயகர் யு.டி.காதர், 'தற்போது கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உறுப்பினர் கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜிய நேரம் நிறைவடைந்ததும், உங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கிறேன்' என்றார்.
இதை ஏற்க பசவராஜ் பொம்மை மறுத்துவிட்டார். முதல்கட்டமாக பேச அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து கேட்டபடி இருந்தார். சபாநாயகரும், சபை விதிகள்படி முதலில் கேள்வி நேரம் நடைபெற வேண்டும் என்பதால், அதன் பிறகே உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உறுதிபட கூறினார். இதை ஏற்க மறுத்த பசவராஜ் பொம்மை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதாவின் மற்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க தொடங்கினர். இதனால் பா.ஜனதா உறுப்பினர்களுக்கும், சபாநாயகர் யு.டி.காதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முதல்-மந்திரி சித்தராமையா குறுக்கிட்டு பேசும்போது, 'பா.ஜனதா கட்சியினர் சபாநாயகரிடம் ஒரு நோட்டீசு வழங்கி, காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளனர். அதில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் நிறைவடைந்த பிறகு அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளனர். அவர்களே கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் முடிவடைந்த பிறகு பேசுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். இப்போது வந்து கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பே பேச அனுமதிக்கும்மாறு கேட்பது சரியல்ல. விதிகள்படி முதலில் கேள்வி நேரம் முடிவடைய வேண்டும். அதன் பிறகு பேச அனுமதிக்கலாம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வந்தோம். அப்போது எங்களுக்கு கேள்வி நேரத்திற்கு முன்பு பேச அனுமதி அளிக்கவில்லை. அதனால் நீங்கள் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். வேண்டுமானால் ஆவணங்களை எடுத்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதனால் சபாநாயகர் எக்காரணம் கொண்டும், கேள்வி நேரத்திற்கு முன்பு பேச பா.ஜனதாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்றார்.
இதை நிராகரித்த பா.ஜனதா உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் சபையில்-கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை 10 நிமிடங்கள் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்த 10 நிமிடங்களுக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோதும், பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். சபையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து சபையை பகல் 1 மணிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். அதன்படி சபை 1 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போதும் பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை ஏமாற்றிவிட்டது, பா.ஜனதாவினரையும், உங்களையும்(சபாநாயகர்) ஏமாற்றிவிட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். சபையில் நடைபெற்ற கூச்சல்-குழப்பத்திற்கு இடையே சபாநாயகர் யு.டி.காதர், கேள்வி நேரத்தை நடத்தினார். பா.ஜனதாவின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதிலளித்தனர். இவ்வாறு 30 நிமிடங்கள் சபை நடைபெற்றது. அதன் பிறகு சபை பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சபை மீண்டும் 3 மணிக்கு தொடங்கியபோது, ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் குமாரசாமி எழுந்து, தாங்கள் கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானம் மீது பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அவற்றின் மீது குமாரசாமி பேசினார். ஆனால் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டானது. இதனால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தத்தில் கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் நேற்று முடங்கின. அதே போல் மேல்-சபையிலும் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் முடங்கின.