"பா.ஜ.க. தனது ஏஜென்சிகளைப் பயன்படுத்த நிர்பந்தித்தது" - நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு காங்கிரஸ் பதிலடி
|ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட லட்சியங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், பத்திரிகையின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டதில் டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள அசையாச் சொத்துக்களின் மதிப்பு 661.69 கோடி ரூபாய். ஏஜேஎல் பங்கு முதலீடு மூலம் யங் இந்தியா நிறுவனத்திற்குக் கிடைத்த ரூ.90.21 கோடியும் முடக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள சொத்து முடக்க அறிவிப்புக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, பா.ஜ.க. மாநிலத் தேர்தல் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு முயற்சி செய்வதாகவும் இது அவர்களின் விரக்தியைப் பிரதிபலிக்கிறது என்றும் சாடியிருந்தார்.
இந்நிலையில் பா.ஜனதா தனது ஏஜென்சிகளைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டது என்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டரில், "அமலாக்க இயக்குனரகத்தால் ஏ.ஜே.எல்-ன் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வந்துள்ள அறிக்கைகள், நடந்து வரும் தேர்தல்களில் பா.ஜ.கவின் பயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தோல்வியை பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு, தனது ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த முயற்சியும் தோல்வியடைந்து, தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும்.
பா.ஜ.க. ஸ்தாபனத்தால் தேர்தல்களின்போது ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தும் இந்த முறை புதியதல்ல, இப்போது முழு தேசத்தின் முன் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு சுதந்திர இயக்கத்தின் குரல். இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கிற்காக பெருமை கொள்கிறது.
நாளிதழின் தலையெழுத்தில் பண்டிட் நேருவின் மேற்கோள் நமக்கு நினைவிற்கு வருகிறது -- "சுதந்திரம் ஆபத்தில் உள்ளது, அதை உங்கள் முழு பலத்துடன் பாதுகாக்கவும்"
நமது ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட இலட்சியங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்திய தேசிய காங்கிரசுக்கு இந்த கேடுகெட்ட விளையாட்டின் மூலம் இந்திய மக்களின் ஞானத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.