பீகாரில் தொகுதி பங்கீட்டை முடித்தது தேசிய ஜனநாயக கூட்டணி
|பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடைந்துள்ளது.
பாட்னா,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. இதுவரை 267 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.கவுக்கு இழுபறி நீடிக்கிறது.
எனவே கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடிக்க பா.ஜ.க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இதன்படி, பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் பா.ஜ.க போட்டியிடும். ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மாஞ்சியின் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
கடந்த 2019 -மக்களவைத் தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டன. லோக் ஜனசக்தி 6 தொகுதிகள் என 40 தொகுதிகளில் இக்கூட்டணி 39 இடங்களை வென்றது. காங்கிரஸ் ஓரிடத்தில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.