< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. வெற்றி பெற்ற 3 மாநிலங்களின் புதிய முதல்-மந்திரிகள் யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்
தேசிய செய்திகள்

பா.ஜ.க. வெற்றி பெற்ற 3 மாநிலங்களின் புதிய முதல்-மந்திரிகள் யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்

தினத்தந்தி
|
8 Dec 2023 5:44 PM IST

மூன்று மாநில முதல்-மந்திரிகள் குறித்த சஸ்பென்ஸ் நாளை மறுதினம் (ஞாயிறு) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பா.ஜ.க. தொடங்கி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆகியும், இதுவரை முதல்-மந்திரிகள் பட்டியல் தயாராகவில்லை. முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்காக மூன்று மாநிலங்களுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலிட பார்வையாளர்கள் விவரம்:

ராஜஸ்தான்: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வினோத் தவாடே, சரோஜ் பாண்டே

மத்திய பிரதேசம்: அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், கே.லட்சுமணன், ஆஷா லக்ரா

சத்தீஷ்கார்: மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனோவால் மற்றும் துஷ்யந்த் கவுதம்.

மேலிட பார்வையாளர்கள், வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் கட்சி மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் கட்சி மேலிடம் முதல்-மந்திரியை முடிவு செய்து அறிவிக்கும்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஷ்காரில் யாரை தேர்வு செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மத்திய பிரசேதத்தில் நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த சவுகானை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்யலாம் என தெரிகிறது. ஒருவேளை சவுகானை மாற்றினால், ஓபிசி வகுப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நரசிங்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரஹலாத் படேல், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்.

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா போபாலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி குறித்த சஸ்பென்ஸ் ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வரும் என்று கூறியிருக்கிறார்.

இதேபோல் மற்ற இரண்டு மாநில முதல்-மந்திரிகள் குறித்த சஸ்பென்சும் நாளை மறுதினம் (ஞாயிறு) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்