பா.ஜனதா கூட்டணிக்கு 450 இடங்கள் கிடைக்கும் - உமாபாரதி கணிப்பு
|தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை 450-க்கு குறைவாக இருக்காது என்று உமாபாரதி கூறியுள்ளார்.
போபால்,
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. ஆனால் இதைவிட அதிக இடங்களில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உமாபாரதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்னவாக இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை 450-க்கு குறைவாக இருக்காது என்பதுதான் எனது மதிப்பீடு' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இமயமலையில் கடந்த 2½ மாதங்கள் தான் இருந்தபோது சந்தித்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், சாமியார்களும் பிரதமர் மோடியை பற்றியே பேசியதாக கூறியுள்ள உமாபாரதி, கன்னியாகுமரியில் மோடி செய்த தியானத்தை தெய்வீகத்தன்மை கொண்ட நபர்கள் மட்டுமே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.