ஒடிசா சட்டசபை இடைத்தேர்தலில் சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரியின் மகள் வெற்றி
|ஒடிசாவில் ஜார்சுகுடா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தலுடன் 3 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஒடிசாவில் ஜார்சுகடாவிலும், உத்தரபிரதேசத்தில் சான்பேயிலும், சுவரிலும், மேகாலயாவில் சோஹியாங்கிலும் இந்தத் தேர்தல் நடந்தது. 10-ந்தேதி அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஒடிசாவில் மந்திரி மகள் வெற்றி
ஒடிசாவில் ஜார்சுகுடா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், சுகாதார மந்திரி நபகிஷோர் தாஸ் ஆவார். இவர் கடந்த ஜனவரி 29-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் அவரது மகள் திபாலி தாஸ், ஆளும் பிஜூஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் தங்காதர் திரிபாதியை 48 ஆயிரத்து 721 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
உ.பி.யில் அப்னாதளம் வெற்றி
உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் பா.ஜ.க.வின் கூட்டணிக்கட்சியான அப்னாதளம் வெற்றி பெற்றிருக்கிறது. சான்பே தொகுதியில் அப்னாதளம் வேட்பாளர் ரிங்கி கொல் வெற்றி பெற்றார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் கீர்த்தி கொல்லை 9,587 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
சுவர் தொகுதியில் அப்னாதளம் வேட்பாளர் சபிக் அகமது அன்சாரி வென்றார். அவர் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அனுராதா சவுகானை 8,724 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேகாலயாவில் ஆளுங்கட்சி தோல்வி
மேகாலயா மாநிலத்தில் சோஹியாங் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சின்ஷர் குபார் ராய் லிங்டோ தாபா வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த ஆளும் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சாம்லின் மல்ஜியாங்கை 3,422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஒடிசாவிலும், உ.பி.யிலும், ஆளும்கட்சியும், அதன் கூட்டணிக்கட்சியும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும், மேகாலயாவில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவி உள்ளது.