< Back
தேசிய செய்திகள்
பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு
தேசிய செய்திகள்

பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

கர்நாடகத்தில் நடந்த பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களை மாற்றி இருப்பதாக போலீசார் மீது சிறப்பு விசாரணை குழுவினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நடந்த பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களை மாற்றி இருப்பதாக போலீசார் மீது சிறப்பு விசாரணை குழுவினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

பிட்காயின் முறைகேடு

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பிட்காயின் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்டதாக பெங்களூருவை சேர்ந்த பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்டோர் மீது பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

பிட்காயின் முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். அதே நேரத்தில் பிட்காயின் விவகாரத்தில் ஸ்ரீகிருஷ்ணா பல கோடி ரூபாயை சுருட்டி இருப்பதாகவும், இந்த முறைகேட்டில் பா.ஜனதாவினருக்கு தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.

சிறப்பு விசாரணை குழு அமைப்பு

பிட்காயின் முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகிருஷ்ணா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்ததும், கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் உண்டாக்கிய பிட்காயின் முறைகேடு குறித்து சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, அந்த குழுவினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு அதிரடி உததரவு பிறப்பித்திருந்தது.

அதன்பேரில், சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த குழுவில் விசாரணை அதிகாரியாக போலீஸ் அதிகாரி ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், பிட்காயின் குறித்து விசாரணை நடத்திய தகவல்கள், பிற ஆவணங்களை சிறப்பு விசாரணை குழுவினரிடம் வழங்கி உள்ளனர்.

ஆவணங்கள் மாற்றம்

அவ்வாறு வழங்கிய ஆவணங்களிலும், ஸ்ரீகிருஷ்ணா, அவரது கூட்டாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ், கார்டு டிஸ்க் உள்ளிட்டவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழங்கிய ஆவணங்களை சிறப்பு விசாரணை குழு போலீசார் பரிசீலனை நடத்தியதில், சில ஆவணங்கள் மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதியில் இருந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி வரை தான் பிட்காயின் முறைகேடுகள் அரங்கேறி இருந்தது. ஆனால் பிட்காயின் முறைகேடு விவகாரத்தை திசை திருப்பும் விதமாக சில ஆவணங்களை மாற்றி இருப்பதாகவும், மேலும் சில ஆவணங்களை சேர்த்திருப்பதாகவும் சிறப்பு விசாரணை குழு போலீசார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும், சில சதி வேலைகளை செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

போலீசார் மீது வழக்குப்பதிவு

இதுபற்றி காட்டன்பேட்டை போலீசில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை அதிகாரி ரவிசங்கர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பிட்காயின் குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது காட்டன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீதே வழக்குப்பதிவாகி இருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட போலீசாரிடமும் கூடிய விரைவில் விசாரிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்