பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் - மத்திய அரசு அறிவிப்பு
|பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வருகிற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி,
பிறப்பு சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை பெற பிறப்பு சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் என்றும் ஓட்டுநர் உரிமம் பெற பிறப்புச் சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின், பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். எனவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.