கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்: அரசு பண்ணையில் 1,800 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு
|கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலால் அரசு பண்ணையில் 1,800 கோழி குஞ்சுகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு,
நாட்டில் பறவை காய்ச்சல் பரவல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனால், கோழி, வாத்து போன்ற வளர்ப்பு பறவையினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் கோழி பண்ணையில் உள்ள 1,800 கோழி குஞ்சுகள் திடீரென உயிரிழந்து உள்ளன.
இதனை தொடர்ந்து, கேரள விலங்குகள் நல துறை மந்திரி சின்சு ராணி, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்பின், உயிரிழந்த கோழி குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எச்5என்1 வைரசின் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பண்ணையில் 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உள்ளன. அவற்றில், 1,800 கோழி குஞ்சுகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, பறவைகளை கொல்வதற்கான நடைமுறைகள், பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.