பிபோர்ஜோய் புயல் எதிரொலி: குஜராத்தில் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
|புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
காந்திநகர்,
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். அதி தீவிர புயலாக மாறியுள்ள இந்த பிபோர்ஜோய் வரும் 15-ந்தேதி(நாளை) சவுராஷ்டிரா - கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. ஆக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 150 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத்தின் போர்பந்தர், ராஜ்க்கோட், மோர்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் வரும் 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.