வாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா - அமித்ஷா தகவல்
|வாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் தலைமை பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு கமிஷனர் அலுவலகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மேம்பாட்டு திட்டத்துக்கான அடிப்படையை உருவாக்குவதற்கான செயல்முறைதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு. டிஜிட்டல் வடிவிலான, முழுமையான மற்றும் துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள், பன்முக பயன்களை கொண்டவை. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான திட்டமிடல், மேம்பாட்டுத் திட்டங் கள் ஏழைகளிலும் ஏழைகளை சென்றடைவதை உறுதி செய்யும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விவரங்களை ஒரு சிறப்பு முறையில் பாதுகாத்தால், மேம்பாட்டுத் திட்டங்களை முறைப்படி திட்டமிட்டு மேற்கொள்ள முடியும். பிறப்பு, இறப்பு பதிவு விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
அதன்படி, ஒருவருக்கு 18 வயதாகும்போது, தானாகவே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுவிடும். அதேபோல ஒருவர் இறக்கும்போது, அவரின் பெயர் தானாகவே தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிடும். உடனே அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்கும்.'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.