பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நல்ல பழக்க வழக்கம் உடையவர்கள்- பாஜக எம்.எல்.ஏ பேச்சு
|குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த பாஜக எம்.எல்.ஏ.க்களுள் சி.கே. ராவுல்ஜி ஒருவர் ஆவார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பில்கிஸ் பானு 20 வயது கர்ப்பிணியாக இருந்தபோது, 11 குற்றவாளிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்களுள் சி.கே. ராவுல்ஜி ஒருவர் ஆவார். இந்த நிலையில் 11 பேரின் விடுதலை குறித்து இன்று பேசிய சி.கே. ராவுல்ஜி, "அவர்கள் பிராமணர்கள். பொதுவாகவே நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள். அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது யாரோ ஒருவரின் தவறான நோக்கமாக இருக்கலாம்." என தெரிவித்துள்ளார். இதையடுத்து இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.