< Back
தேசிய செய்திகள்
எல்லையில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்படாது:  சீனாவிடம் தெளிவுப்படுத்திய இந்தியா
தேசிய செய்திகள்

எல்லையில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்படாது: சீனாவிடம் தெளிவுப்படுத்திய இந்தியா

தினத்தந்தி
|
6 May 2023 7:00 AM IST

எல்லை பகுதியில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்படாது என்று சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

பனாஜி,

கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இதற்காக ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் லவ்ரவ், சீன வெளியுறவு துறை மந்திரி கின் கேங் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் கோவாவுக்கு வருகை தந்தனர்.

இந்த சந்திப்பில், அவர்களுடன் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மண்டல பாதுகாப்பு போன்ற முக்கியம் வாய்ந்த புவிஅரசியல் விவகாரங்கள் பற்றி மந்திரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் சீனா இடையே சுமுக நிலை காணப்படுகிறது. அசல் எல்லை கோட்டில் நிலைமை ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என சீன தலைமை தொடர்ந்து கூறி வந்தது.

இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு துறை மந்திரி கின் கேங் உடனான இருதரப்பு சந்திப்பில், எல்லை பகுதியில் காணப்படும் நிலைமை பற்றி மிக வெளிப்படையாக ஆலோசனை நடத்தினேன்.

எல்லை பகுதியில் இயல்பற்ற நிலை காணப்படுகிறது. அதுபற்றிய வெளிப்படையான ஆலோசனையை நாங்கள் மேற்கொண்டோம் என்றே நான் நினைக்கிறேன். இது முதன்முறையாக நடந்த ஆலோசனை அல்ல. ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக கூட கின் கேங்கிடம் இந்த விவகாரம் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

லடாக் பிரிவில் அசல் எல்லை கோட்டு பகுதியில் இருந்து முன்கள வீரர்களை திரும்பி பெறும் நடைமுறையை மேற்கொள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பொதுவெளியிலும் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களின்போதும் சீன தரப்பிடம் தெளிவாகவும் மற்றும் வெளிப்படையான முறையிலும் நான் தெரிவித்து இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்