பைக் டாக்சியில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: எல்லை மீறிய டிரைவர் கைது ..!
|ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது டிரைவர் ஒரு கையால் பைக் ஓட்டினார். மேலும் பைக் ஓட்டியபடியே தகாத செயலில் ஈடுபட்டார்.
பெங்களூரு,
பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்தும், அங்கு நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமையையும் கண்டித்து போராடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்குப் பிறகு அதில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் ரேபிடோ பைக் டாக்சி மூலம் வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது அவர் தனது செல்போன் எண்ணை பைக் டாக்சி டிரைவரிடம் கொடுத்தார். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற பிறகு, பைக் டாக்சி டிரைவர் தொடர்ந்து அவருக்குத் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது ஆபாசமாக குறுந்தகவல் மற்றும் செல்போன் மூலம் அழைத்து ஆபாசமாகப் பேசி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‛‛மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து பெங்களூர் டவுன்ஹாலில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீட்டுக்கு ரேபிடோ பைக்கில் புறப்பட்டேன். ஆச்சரியம் என்னவென்றால் டிரைவர் வேறு பைக்கில் வந்தார். இருப்பினும் எனது முன்பதிவைச் செயலியில் சரிபார்த்தேன். அது சரியாக இருந்ததால் பைக்கில் பயணித்தேன். இந்த வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது டிரைவர் ஒரு கையால் பைக் ஓட்டினார். மேலும் பைக் ஓட்டியபடியே தகாத செயலில் ஈடுபட்டார். நான் பயந்தாலும் எனது பாதுகாப்பு கருதி அமைதியாக இருந்தேன். மேலும் நான் இறங்க வேண்டிய இடத்திற்கு 200 மீட்டருக்கு முன்பே இறங்கிவிட்டேன்.
இதையடுத்து அந்த நபர் எனக்கு போன் செய்தார். மேலும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தார். நான் அவரது செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன். தற்போது அவர் வேறு எண்களிலிருந்து எனக்கு போன் செய்கிறார். ரேபிடோ தனது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
மேலும் அந்த டிரைவர் வாட்ஸ்அப்பில் செய்த மெசேஜை பாதிக்கப்பட்ட பெண் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவை பார்த்த பெங்களூர் மாநகர போலீசார் டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க எஸ்ஜே பார்க் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். உங்களின் தொடர்பு எண்ணை மெசேஜ் அனுப்புங்கள்' எனக் கேட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்ஜே பார்க் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்சி டிரைவரை கைது செய்தனர். துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் என்று ரேபிடோ கூறியுள்ளது.