< Back
தேசிய செய்திகள்
பைக் டாக்சி பயணம் பாதுகாப்பா? ஆபத்தா?
தேசிய செய்திகள்

'பைக் டாக்சி' பயணம் பாதுகாப்பா? ஆபத்தா?

தினத்தந்தி
|
7 Dec 2022 2:54 AM IST

பைக் டாக்சி பயணம் பாதுகாப்பானதா, இல்லையா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து போக்குவரத்துத் துறை எட்டி இருக்கும் அதீத வளர்ச்சியால் உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது.கையடக்க செல்போனின் உதவியோடு எங்கு வேண்டும் என்றாலும் போக முடிகிறது. எதை வேண்டும் என்றாலும் வாங்க முடிகிறது.

செயல்வீரன்

செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும் ஒரு செயல்வீரனைப் போல் செயல்பட்டு அது உதவிகளை செய்துவருகிறது. அப்படி அறிமுகமான செயலிகள் மூலம்தான் 'கால் டாக்சி', 'ஆட்டோ', 'பைக் டாக்சி' போன்றவை இன்று வலைத்தள வழிகாட்டுதலுடன் இயங்கி வருகின்றன.

வழி தெரிய வேண்டியது இல்லை. மொழி தெரிய வேண்டியது இல்லை. பேரம் பேசவேண்டியது இல்லை. அய்யோ இவ்வளவு கட்டணமா? என்று மலைக்கவும் தேவை இல்லை. எல்லாமே கூகுள் பார்த்துக் கொள்கிறது.

போனில் அழைத்தால் வாசல் தேடி வருகிறார்கள். சிரமம் இல்லாத பயணம் என்பதால் ஆன்லைனில் வாகனங்களை அழைத்துப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் புரட்சி செய்து வரும் பெங்களூருவிலும் ஆன்லைனில் வாகனங்களை அழைத்து பயணம் செய்வது அதிகரித்துள்ளது.

1.30 கோடி மக்கள் வசித்து வரும் பெங்களூருவில் ரேபிடோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்சியை பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பைக் டாக்சி உதவியாக இருந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் பைக் டாக்சியில் ஏறி செல்கிறார்கள்.

மக்களிடம் வரவேற்பு

இதற்காக அந்த தனியார் நிறுவனங்கள் செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து புக் செய்தால், பைக் டாக்சியில் வந்து, அந்த இடத்திற்கு அழைத்து சென்று விட்டு விட்டு, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த பைக் டாக்சிக்கு பெங்களூரு நகரவாசிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஆட்டோ, கார்களை விட பைக் டாக்சியில் செல்ல கட்டணம் குறைவாகும். இதன் காரணமாக தான் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்வதை தவிர பைக் டாக்சிகள் மூலமாக உணவு பொருட்கள், மருந்துகள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரி செலுத்துவதில்லை

ஆனால் இந்த பைக் டாக்சியை இயக்குவதற்கு ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது ஆட்டோ, வாடகை கார்கள் மஞ்சள் நிற வாகன பதிவு எண்ணுடன் இயக்கப்படுகிறது. இதற்காக ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அரசு வரி செலுத்தி வருகின்றனர். 2 ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வாகனங்களை புதுப்பிக்க (எப்.சி.) வேண்டியது கட்டாயம்.

ஆனால் பைக் டாக்சிகள் வெள்ளை நிற பதிவு எண்ணுடன் ஓட்டப்படுவதால், அரசுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருந்தால், அதனை ரேபிடோ, ஊபர் நிறுவனத்துடன் இணைத்து கொண்டு ஓட்ட தொடங்கலாம். இதற்காக ஓட்டுனர் உரிமம், இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆர்.சி.புக் இருந்தால் மட்டும் போதுமானதாகும். வெள்ளை நிற வாகன பதிவெண்ணுடன் ஓட்டுவதால் வரி செலுத்த வேண்டியதில்லை.

ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு

இதனால் தான் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்க கூடாது, தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக கூறி வருகிறார்கள். இதையடுத்து, பெங்களூருவில் பைக் டாக்சிக்கு அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டும் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது. பைக் டாக்சிக்காக தனியாக விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படாமல் இருந்தாலும், பைக் டாக்சி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான பைக் டாக்சிகள் ஓடுகிறது. அந்த பைக் டாக்சிகளை ஆட்டோ டிரைவர்கள் ஓடவிடாமல் தடுப்பது, போலீசாரிடம் பிடித்து கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் பைக் டாக்சி நிறுவனங்கள் பாதுகாப்புடன் இயங்குவதற்கும், அதன் ஓட்டுனர்களை நியமிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி விதித்திருந்தார்.

பெண் பாலியல் பலாத்காரம்

இந்த பைக் டாக்சிகள் பெண்களுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பானதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற கேரள இளம்பெண்ணை டாக்சி ஓட்டுனர் தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் இரவில் பைக் டாக்சிகளை ஓட்டும் நபர்கள் மதுஅருந்திவிட்டு, குடிபோதையில் ஓட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும் நள்ளிரவில் பைக் டாக்சிகளில் தனியாக செல்லும் நபர்களிடம் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுகிறது. இதற்காக தான் பைக் டாக்சியை ஓட்ட அனுமதி பெறும் நபர்களிடம், அவர்களது பின்னணியை பற்றி அறிந்தும், குற்றங்களில் ஏதும் ஈடுபட்டு இருக்கிறாரா? என்பது பற்றி தெரிந்தும், பணியில் சேர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டு இருந்தார்.

பயணம் பாதுகாப்பானதா?

பைக் டாக்சி பயணம் பாதுகாப்பானதாக உள்ளதா? இல்லை பயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறதா? என்பது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

இதுபற்றி நாகவாராவை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதா கூறுகையில், "பைக் டாக்சியில் நானும் பயணம் செய்துள்ளேன். ஆட்டோ, காரில் செல்வதை விட பைக் டாக்சியில் விரைவாக நான் செல்லும் இடத்திற்கு செல்ல முடிகிறது. பயன் உள்ளதாக தான் இருக்கிறது. இருப்பினும் பைக் டாக்சியில் பெண்களின் பாதுகாப்பும் முக்கியமாகும். நள்ளிரவில் பைக் டாக்சியில் செல்வதை பெண்கள் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக பெண்கள் ஓட்டும் பைக் டாக்சி கிடைத்தால், அதில் செல்லும் போது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.

11 மணிக்கு மேல் இயக்க கூடாது

இதுபற்றி பி.டி.எம். லே-அவுட்டை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அருண் கூறும் போது, "நான் 2 முறை பைக் டாக்சியில் சென்றிருக்கிறேன். கார், ஆட்டோவை ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு தான். பெண் ஒருவர் இரவில் பைக் டாக்சியில் சென்ற போது பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. அதுபோல் ஆண்களுக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆண்கள் நள்ளிரவில் சென்றால், பணம், பொருட்களை கொள்ளையடிப்பார்கள்.

எனவே இரவு 10 அல்லது 11 மணிக்கு மேல் பைக் டாக்சிகளை இயக்க கூடாது. அதிகாலை 5 மணிக்கு பின் ஓட்டலாம். பைக் டாக்சியில் நள்ளிரவு பெண்கள் தனியாக செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நள்ளிரவில் வெளியே செல்லும் பெண்கள் வாடகை காரை பயன்படுத்தினால், பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.

கட்டணம் குறைவு

இதுபற்றி பைக் டாக்சி ஓட்டும் பொம்மனஹள்ளியை சேர்ந்த நரேஷ்குமார் கூறும்போது, "நான் 5 ஆண்டுகளாக பைக் டாக்சி ஓட்டி வருகிறேன். நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுவரை எந்த விபத்தையும் ஏற்படுத்தியது இல்லை. எனது பைக் டாக்சியில் கூட பல பெண்கள் பயணித்திருக்கிறார்கள். அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று விட்டுள்ளேன். ஆட்டோ, காரில் செல்வதை காட்டிலும் பைக் டாக்சியில் கட்டணம் குறைவு.

பைக் டாக்சியில் வரும் பயணிகள் காயம் அடைந்தால் கூட காப்பீடு கிடைக்கும். பின்னால் அமரும் பயணிக்கு ஹெல்மெட் கொடுப்போம். சில பெண்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவர்களது பிள்ளைகளை பள்ளியில் இருந்து மாலையில் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறோம். வயதானவர்களுக்கும் இந்த பைக் டாக்சி உதவியாக இருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு செல்வதில்லை என்பதால், மக்கள் எங்களை அழைக்கிறார்கள். பைக் டாக்சி ஓட்டும் சில நபர்கள் தவறு செய்வதால், எல்லாரும் பாதிக்கப்படுகிறோம். மற்றபடி பைக் டாக்சி பாதுகாப்பானது தான். பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு முன்பு சீருடை இருந்தது. தற்போது அந்த சீருடை முறை இல்லை. இதனால், அந்த சீருடை முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்" என்றார்.

வருமானம் பாதிப்பு

இதுபற்றி கல்யாண் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜு கூறுகையில், "பைக் டாக்சிகள் வந்த பின்பு எங்களது வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டாக்சிக்கு அரசு அனுமதி வழங்க கூடாது. நாங்கள் மஞ்சள் நிற வாகன பதிவு எண்ணுடன் ஓட்டுவதற்கு அரசுக்கு முறையாக வரி செலுத்துகிறோம். பைக் டாக்சி வைத்திருப்பவர்கள் எந்த வரியும் செலுத்துவதில்லை.

இந்த பைக் டாக்சி பயணிகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சியில் சென்ற இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார். பைக் டாக்சியில் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முறையான அனுமதி இல்லாமல் ஓட்டுவதால், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும். பெங்களூருவில் 1½ லட்சம் ஆட்டோ டிரைவர்களும் இந்த பைக் டாக்சியால் வருமானத்தை இழந்திருக்கிறோம்" என்றார்.

இதுகுறித்து வாடகை கார் ஓட்டும் ஒயிட்பீல்டுவை சேர்ந்த கிரி கூறும் போது, "பெங்களூருவில் பைக் டாக்சிகள் இயக்கப்படுவதால், ஆட்டோ, கார் டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி அந்த பைக் டாக்சிகள் ஓட்டப்படுகிறது. பைக் டாக்சியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எந்த ஒரு வரியும் செலுத்தாமல், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அனைவரும், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து ஓட்டி வருகின்றனர். யார் வேண்டுமானலும் பைக் டாக்சியை ஓட்டும் நிலை இருப்பதால், அதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

சொந்தமாக மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் எவரும் 'பைக் டாக்சி' தொழிலில் இணையலாம் என்ற நிலை மாற வேண்டும். இந்த தொழிலில் சேருபவர்களின் பின்புலம், அவர்கள் மீது குற்ற வழக்கு எதுவும் நிலுவையில் இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆராய வேண்டும். அப்போதுதான் 'பைக் டாக்சி' பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்