பீகார் கலவரம்; 10 பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
|பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.
பாட்னா,
அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார், உத்தர பிரதேசம், அரியானா மற்றும் தெலுங்கானாவில் பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் பரவலாக நடந்துள்ளன.
பீகாரின் சம்பரான் மாவட்டத்தின் பச்சிம் பகுதியில் துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு மீதும், பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்ஜய் ஜெய்ஸ்வாலின் இல்லம் மீதும் கும்பல் ஒன்று நேற்று தாக்குதல் நடத்தி சென்றது. பீகாரில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றின் டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
பீகாரில் ஒரே நாளில் 2 ரெயில்கள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில், பீகாரில், அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு தலைமையிலான மாணவ அமைப்புகள் 24 மணிநேர முழு அடைப்புக்கும் இன்று அழைப்பு விடுத்தன.
போராட்டம் வன்முறையாக உருமாறியதற்கு பின்னணியில் பல பயிற்சி மையங்கள் செயல்பட்ட விசயம் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இந்த சூழலில், பா.ஜ.க.வினருக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான உத்தரவை பிறப்பித்தது. இதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) இன்று முதல் பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொள்கிறது.
இதன்படி, பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவர்களுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.