பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது...15 நாட்களில் 7வது சம்பவம்
|பீகாரில் 15 நாட்களில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
பாட்னா,
பீகாரின் சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் மீதுள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. சிவான் மாவட்டத்தின், தியோரியா தொகுதியில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலமானது பல கிராமங்களை இணைத்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 5 மணியளவில் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. பாலம் இடிந்ததில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பீகாரில் இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் இது ஏழாவது சம்பவமாகும். பாலம் இடிந்ததற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துணை வளர்ச்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியை சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தை அடைந்து ஆய்வு செய்தனர். பீகாரில் பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவத்திற்கு 11 நாட்களுக்கு முன்பு சிவானில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த வாரம் பீகாரின் மதுபானி, அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட 6 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த நிகழ்வுகளை விசாரிக்க பீகார் அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.