மே மாதத்தில் பீகார், ஒடிசாவில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
|மே மாதத்தில் பீகார், ஒடிசாவில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதிகளில் வருகிற நாட்களில் அதாவது மே மாதத்தில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு வெப்பம் நிலவும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதைப்போல வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனக்கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் வழக்கமானது முதல் வழக்கத்தை விட அதிகமான அளவுக்கு மழை பொழிவும் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
கேரளா, ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவின் பெரிய பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.