பீகார்: ஹோலி கொண்டாடிய மந்திரி வீட்டில் திருட்டு
|பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மந்திரி தேஜ் பிரதாப் வீட்டுக்கு வந்திருந்த கலைஞர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர் என எப்.ஐ.ஆர். பதிவானது.
பாட்னா,
பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மந்திரி தேஜ் பிரதாப் வீட்டுக்கு வந்திருந்த கலைஞர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர் என எப்.ஐ.ஆர். பதிவானது.
நாடு முழுவதும் சமீபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் கூட்டணியாக உள்ள ஆர்.ஜே.டி. கட்சியை சேர்ந்த மந்திரி தேஜ் பிரதாப்பின் பாட்னா நகரில் உள்ள வீட்டில் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதற்காக வீட்டுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேஜ் பிரதாப் கிருஷ்ணர் போன்று வேடமிட்டு இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவரது வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளன என கூறப்படுகிறது. இதனை அவரது உதவியாளரான எம். சின்ஹா போலீசில் புகாராக அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த புகாரில், பிருந்தாவன் நகரில் இருந்து ஹோலி பண்டிகையை கொண்டாட அழைக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் மந்திரியின் வீட்டில் திருடியுள்ளனர் என தெரிவித்து உள்ளார். இதன்படி, ரூ.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளன. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.