இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிந்துவிட்டது - நிதிஷ் குமார்
|கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்தபோதே எதிர்த்தேன் என நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பாட்னா,
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் நிதிஷ்குமார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரான நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.
கடந்த மாதம் திடீரென எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார். பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இதனிடையே,எதிர்காலத்தில் நிதிஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்குவீர்களா? என்று லாலுபிரசாத்திடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த லாலுபிரசாத், நிதிஷ் குமாருக்காக கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன' என்றார்.
இந்நிலையில், கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன என்று லாலுபிரசாத் கூறியது குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடுவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிந்துவிட்டது. நான் பீகார் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறேன். பீகார் மக்களுக்காக உழைக்கிறேன், அதை தொடர்ந்து செய்வேன்.
கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்தபோதே எதிர்த்தேன். நான் வேறொரு பெயரை நினைத்திருந்தேன். கூட்டணிக்காக முடிந்தவரை முயன்றேன். எல்லாம் இப்போது முடிந்து விட்டது.
யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அங்கு விஷயங்கள் சரியாக நடக்கவில்லை, அதனால் நான் அவர்களை (லாலுபிரசாத் ) விட்டுபிரிந்து விட்டேன்' என்றார்.