< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் நிதிஷ்குமார் சந்திப்பு; ஒன்றுபடுவதற்கான தருணம் இது என பேட்டி
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர்களுடன் நிதிஷ்குமார் சந்திப்பு; ''ஒன்றுபடுவதற்கான தருணம் இது'' என பேட்டி

தினத்தந்தி
|
7 Sept 2022 12:33 AM IST

எதிர்க்கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதற்கான தருணம் இது என அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் நிதிஷ்குமார்...

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறார். 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் நாடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள இந்த தருணத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த வகையில் டெல்லியில் நேற்று முன்தினம் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித்தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

'ஒற்றுமைக்கான தருணம் இது'

இதையொட்டி நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள், காங்கிரஸ், மாநிலக்கட்சிகள் ஒன்றுபடுவதற்கான தருணம் இது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் என் இளமைக்காலத்தில் நீண்டகால தொடர்பு உண்டு. நாங்கள் பிரிந்திருந்தோம். ஆனால் இன்று மீண்டும் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் ஒட்டுமொத்த கவனமும், இடதுசாரிகளையும், மாநில கட்சிகளையும், காங்கிரசையும் ஒன்றிணைப்பதுதான்.

பிரதமர் பதவி மீதான எனது ஆசை பற்றி கேட்கிறீர்கள். இது தவறானது. நான் பிரதமர் பதவியை கோரவில்லை. பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சீதாராம் யெச்சூரி-டி.ராஜா

நிதிஷ்குமாருடனான சந்திப்பு பற்றி சீதாராம் யெச்சூரி கூறுகையில், "எங்கள் முதல் திட்டம், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவதுதான். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதல்ல. நேரம் வரும்போது, நாங்கள் அதை தீர்மானிப்போம். இதில் இன்னும் உறுதியான திட்டம் வகுக்கப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது" என தெரிவித்தார்.

டி.ராஜா நிருபர்களிடம் பேசுகையில், "நாட்டில் உருவாகி வரும் அரசியல் நிலைமை பற்றி நாங்கள் விவாதித்தோம்" என தெரிவித்தார். டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் இவர், ''ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் எதேச்சதிகாரமான, தவறான ஆட்சிக்கு எதிராக ஒற்றுமையின் 'இந்தியா மாடல்' உருவாகி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்