< Back
தேசிய செய்திகள்
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் டெல்லி வருகை - ராகுல், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்திக்க திட்டம்
தேசிய செய்திகள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் டெல்லி வருகை - ராகுல், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்திக்க திட்டம்

தினத்தந்தி
|
5 Sept 2022 5:18 PM IST

3 நாள் பயணமாக நிதிஷ் குமார் டெல்லிக்கு வருகை தந்தார். இந்த பயணத்தின் போது முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார். பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப்போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜனதாவில் இணைந்து விட்டனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

இதன்படி இன்று நிதிஷ் குமார் டெல்லி வருகை தந்தார். நிதிஷ்குமாரின் 3 நாள் டெல்லி பயணத்தின்போது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ராகுல், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டெல்லி வந்த நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்