< Back
தேசிய செய்திகள்
பீகாரில் மத ஊர்வலத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதி விபத்து: 12 பேர் பரிதாப பலி - பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

பீகாரில் மத ஊர்வலத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதி விபத்து: 12 பேர் பரிதாப பலி - பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
20 Nov 2022 11:59 PM IST

பீகாரில் வைஷாலி மாவட்டத்தில் மத ஊர்வலத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் சாலையோர கோயிலில் பக்தர்கள் கூட்டத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

வைஷாலி மாவட்டத்தில் தேஸ்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நயா காவ்ன் தோலா கிராமத்தில் இரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கிராமம் ஹாஜிபூர்-மஹ்னார் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

முன்னதாக கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது, ​​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது. காயமடைந்தவர்கள் ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் ராஷ்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ முகேஷ் ரூஷன் கூறுகையில், "இந்த சம்பவத்தில் 12 பேர் இறந்தனர். அவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இறந்தனர்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில், "பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளது. .

மேலும் செய்திகள்