ராகுலின் பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டுகிறது; பல்லாரியில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்
|கர்நாடகத்தில் 13-வது நாளாக பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் பல்லாரியில் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். 1,000 கிலோ மீட்டர் தூர மைல்கல்லை அவர் எட்டுகிறார்.
பெங்களூரு:
ராகுல்காந்தியின் பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து கேரளாவுக்கு வந்தார். அந்த மாநிலத்தில் மட்டும் 19 நாட்கள் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த மாதம் 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை கர்நாடகத்தில் தொடங்கினார். மைசூரு, மண்டியா, துமகூரு வழியாக அவரது நடைபயணம் சித்ரதுர்காவுக்கு சென்றது. நேற்று முன்தினம் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை அந்த மாவட்டத்தில் ராம்புராவில் நிறைவு செய்தார். அங்கு அவர் தங்கினார்.
பல்லாரிக்கு சென்றார்
இந்த நிலையில் ராகுல் காந்தியின் 37-வது மற்றும் கர்நாடகத்தில் 13-வது நாள் பாதயாத்திரை நேற்று காலை 7 மணிக்கு ராம்புராவில் இருந்து தொடங்கியது. அங்கு ராகுல் காந்தியை வரவேற்று அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 13 கிலோ மீட்டர் நடைபயணமாக வந்த ராகுல் காந்தி ஜஜிரகல்லு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நிறைவு செய்தார். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்ற ராகுல் காந்தி மதிய உணவு சாப்பிட்டார்.
பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வந்த ராகுல் காந்தி மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து பாதயாத்திரையை தொடங்கினார். பாதயாத்திரை 6½ கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆந்திராவில் உள்ள ஓபளாபுரம் பகுதியில் ராகுல் காந்தி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அந்த ஓய்வுக்கு பிறகு அவர் 5½ கிலோ மீட்டர் தூரம் காரில் பல்லாரி மாவட்டம் ஹலகுந்திக்கு சென்றார். அத்துடன் நேற்றைய பாதயாத்திரை நிறைவடைந்தது. அங்கு ராகுல் காந்தி தங்கினார்.
1,000 கிலோ மீட்டர் மைல்கல்
பல்லாரியில் இன்று (சனிக்கிழமை) பாதயாத்திரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலையில் அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுகிறார். நேற்று நடைபெற்ற பாதயாத்திரையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பாதயாத்திரையின்போது, ராகுல் காந்தியை பல்வேறு தரப்பினர் சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். ராகுல் காந்திக்கு ஒருவர், சோனியா மற்றும் ராகுல் காந்தி ஒன்றாக இருக்கும் புகைப்படம் அடங்கிய நீளமான படத்தை பரிசாக வழங்கினார்.
அதை ராகுல் காந்தி புன்முறுவலுடன் பெற்று கொண்டார். மொத்தம் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாதயாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இன்று ராகுல் காந்தியின் பாதயாத்திரை 1,000 கிலோ மீட்டரை கடக்கிறது.
அவரது இந்த பாதயாத்திரையில் 1,000 கிலோ மீட்டர் கடந்தது முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் இதுவரை 1½ லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். வருகிற 20-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்தில் நிறைவடைகிறது.