< Back
தேசிய செய்திகள்
ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டு கணவன் தப்பியோட்டம்
தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டு கணவன் தப்பியோட்டம்

தினத்தந்தி
|
3 May 2024 11:27 AM IST

ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன் தப்பியோடியுள்ளார்.

லக்னோ,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அப்சனா (வயது 26) கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ள அப்சனாவுக்கு கல்யாண தகவல் மைய விளம்பரம் மூலம் மாப்பிள்ளை பார்க்கப்பட்டது.

அப்போது, மத்தியபிரதேச மாநிலம் போபாலில் வேலை செய்துவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அர்சத் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அர்சத்திற்கும் அப்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் போபாலில் வசித்து வந்தனர்.

பின்னர், அர்சத் அப்சனாவை உத்தரபிரதேச மாநிலம் புஹர்யன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கணவரின் வீட்டிற்கு வந்த அப்சனாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

கணவர் அர்சத்திற்கு ஏற்கனவே திருமணமாகி வேறொரு மனைவி உள்ளார் என்பது அப்சனாவுக்கு தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்சனா கணவன் மற்றும் மாமியாருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்சத் மற்றும் அவரது தாயார் சேர்ந்து அப்சனாவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், மோதல் முற்றிய நிலையில் கடந்த 28ம் தேதி அப்சனா தனது கணவர் அர்சத்துடன் புஹர்யன் நகரில் இருந்து ரெயில் மூலம் போபால் புறப்பட்டார்.

ரெயில் 29ம் தேதி காலை உத்தரபிரதேசத்தின் ரான்சி ஜங்ஷன் அருகே வந்தபோது அர்சத் தனது மனைவி அப்சனாவை சரமாரியாக தாக்கினார். ஓடும் ரெயிலில் நடந்த இச்சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், மனைவியிடம் தலாக், தலாக், தலாக் என 3 முறை கூறிய அர்சத் உன்னை விவாகரத்து செய்துவிட்டேன் என்றார். பின்னர், ரான்சி ஜங்ஷன் அருகே ரெயில் வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்த அர்சத் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

கணவன் ஓடும் ரெயிலில் தனக்கு தலாக் என கூறி விவாகரத்து செய்துவிட்டு தப்பியோடியது குறித்து அப்சனா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்