ராகுல்காந்தியின் யாத்திரைக்கு மணிப்பூர் பாஜக அரசு கடும் நிபந்தனை; காங்.எடுத்த அதிரடி முடிவு
|ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை வரும் 14 -ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் துவங்குவதாக இருந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் 3-வது முறையாக அரியணையில் ஏற பா.ஜனதாவும், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி நிற்கின்றன. செல்வாக்குமிக்க மோடியை வீழ்த்த 'இந்தியா கூட்டணி'யாக 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது. பா.ஜனதாவும் தங்களது அணியை வலுப்படுத்த தயாராகி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராகுல்காந்தி முதல் ஆளாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதாவது 2-வது கட்ட பாதயாத்திரை மூலம் மக்களை கவரவும், தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மணிப்பூரில் இருந்து தொடங்குகிறார். 'பாரத் நியாய் யாத்ரா' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த யாத்திரை 14 மாநிலங்களை கடந்து மும்பையில் மார்ச் 20-ந் தேதி முடிவடைகிறது.
இந்த நடைபயணத்தை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹட்டா காங்ஜெய்புங்கில் உள்ள அரண்மனை மைதானத்தில் இருந்து தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரசாருடன் இணைந்து, தேசிய தலைமையும் மேற்கொண்டது.
மேற்படி மைதானத்தில் இந்த பாதயாத்திரையை தொடங்குவதற்கு மாநில அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கெய்சம் மெகசந்திரா தலைமையிலான குழு ஒன்று முதல்-மந்திரி பைரேன் சிங்கை சந்தித்து அனுமதி கேட்டனர். காங்கிரசின் இந்த கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க நிகழ்வுக்கு அனுமதி மறுத்தது.
அதேநேரம் ராகுல்காந்தியின் யாத்திரை தொடக்க நிகழ்வுக்காக மாற்று இடத்தை பரிசீலித்தது. இதையடுத்து அனுமதி கேட்ட இடத்தில் இருந்தே ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்க மணிப்பூர் அரசு அனுமதி அளித்தது. அதேநேரம் குறைவான எண்ணிக்கையிலேயே தொண்டர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதனால், பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இம்பாலில் இருந்து தொடங்க முடியாத நிலை இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.
இந்த நிலையில், ராகுலின் பாத யாத்திரையை மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இருந்து தொடங்குவோம் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கேய்ஷம் மெகாசந்த்ரா கூறுகையில், இம்பாலில் இருந்து யாத்திரை தொடங்க அனுமதி கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்கள். இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இதனால், பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இருந்து தொடங்கும். மல்லிகார்ஜுன கார்கே இந்த யாத்திரையை தொடங்கி வைப்பார்" என்றார்.