சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்: பிரதமருக்கு பஞ்சாப் முதல்-மந்திரி நன்றி
|மொகாலி-சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி நன்றி தெரிவித்து உள்ளார்.
சண்டிகர்,
பிரதமர் மோடி, மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, சமீபத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிக்களை (சீட்டா) பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். தொடர்ந்து அவர், சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, அரியானா சிவில் விமான போக்குவரத்து மந்திரி துஷ்யந்த் சவுதாலா மற்றும் நான் என இருவரும் சேர்ந்து பரஸ்பரம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம்.
அதில், மொகாலி-சண்டிகர் விமான நிலையத்திற்கு, வருகிற 28-ந்தேதி பகத் சிங் பிறந்த நாள் வருவதற்கு முன்பு, அந்த பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம். பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில், இந்த பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.