பி.ஜி.எம்.எல். பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க தங்கச்சுரங்க நிர்வாகம் தடை
|பி.ஜி.எம்.எல். பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க தங்கச்சுரங்க நிர்வாகம் தடையாக இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மஞ்சு பேசியுள்ளார்.
கோலார் தங்கவயல்
கோலார் தங்கவயலில் உள்ள தங்க சுரங்க பகுதியில் பி.ஜி.எம்.எல். பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் தேசிய அளவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
மேலும் அவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மஞ்சு தலைமையில் அதிகாரிகள் பி.ஜி.எம்.எல். பள்ளியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது அவர் பள்ளியில் பணியாற்றும் வரும் ஊழியர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மஞ்சு பேசியதாவது:-
இந்த பள்ளி 130 ஆண்டு பழமையானது. இந்த பள்ளி தங்க சுரங்க கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. தற்போது சுரங்கம் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது. இதற்கு முன்பு ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் படித்து வந்தனர்.
தற்போது 114 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த அளவே ஆசிரியர்கள் உள்ளனர். கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய தங்க சுரங்க நிர்வாகம் தடையாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே தங்கசுரங்கம் நிர்வாகம் கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவேண்டும். அலட்சியமாக செயல்படகூடாது. மீறி அலட்சியமாக செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.