பெங்களூரு: மசாஜ் சென்டரில் வேலை தருவதாக கூறி பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடூரம்
|விபசாரத்திற்காக தாய்லாந்தில் இருந்து இளம்பெண்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எலகங்கா,
பெங்களூருவில் வேலை தருவதாக கூறி பெண்கள் பலரையும் விபசாரத்தில் தள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுதொடர்பான தகவல்களின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தி பெண்களை மீட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு பெண்களை வைத்து பெங்களூருவில் விபசார தொழில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மசாஜ் சென்டர் பெயரில் 'ஹைடெக்' விபசாரம் செய்து வந்த 3 பேரை எலகங்கா நியூடவுன் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு எலகங்கா நியூடவுன் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் எலகங்கா நியூ டவுன் போலீசார் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆஞ்சநேய கவுடா, ஹரிஷ் உள்ளிட்டோர் என்பது தெரிந்தது.
இவர்கள் விபசாரத்திற்காக தாய்லாந்தில் இருந்து இளம்பெண்களை சுற்றுலா விசாவில் பெங்களூருவுக்கு அழைத்து வந்து, மசாஜ் சென்டரில் வேலை தருவதாக கூறி விபசாரத்தில் தள்ளியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 7 தாய்லாந்து பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.