பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தல்
|பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பெங்களூரு:
பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பெங்களூரு தமிழ்ச்சங்கம்
பெங்களூரு அண்ணாசாமி முதலியார் சாலையில் பெங்களூரு தமிழ்ச்சங்கம் அமைந்துள்ளது. தற்போது பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் 2023-2025-ம் ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 16-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று பெங்களூரு தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு சங்க வளாகத்தில் நடைபெறும் எனவும், தேர்தலுக்கு முன்பு 3 மாதங்களுக்குள் சங்க உறுப்பினர் தகுதி பெற்றுள்ள புரவலர், வாழ்நாள் உறுப்பினர்கள் மட்டும் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் சங்க விதிகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் ஒரு தலைவர், ஒரு துணை தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணை செயலாளர்கள் 4 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
வருகிற 16-ந் தேதி முடிவு
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை(27-ந் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 4 மணி வரை நடக்கிறது. வேட்புமனு ஏற்கும் கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். வேட்பாளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகிற 30-ந் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பணி 31-ந் தேதியும் நடக்கும். முன்னதாக வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற 31-ந் தேதி மதியம் 3 மணி வரை கால அவகாசம் உள்ளது.
தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் மட்டுமே நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் பெங்களூரு தமிழ்ச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.