பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு.. டைமரை ஆன் செய்வதற்கு முன்பாக ரவா இட்லி வாங்கிய குற்றவாளி
|ஓட்டல் குண்டுவெடிப்பு குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
ஓட்டல் மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் சந்தேகப்படும்படியான ஒரு நபர் நடமாட்டம் குறித்த படங்கள் பதிவாகி உள்ளன. அதில், சந்தேக நபர் ஒரு பையுடன், தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து நடந்து செல்வதும், கைக்கடிகாரத்தை பார்ப்பதும் தெரிகிறது. எனவே, அந்த நபர் ஓட்டலுக்குள் குண்டு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுகிறது.
குற்றவாளியின் நடமாட்டம் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருப்பதால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
ஒரு நபர் மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து பேருந்தில் வந்துள்ளார். அவர் ஓட்டலில் உள்ள கவுண்டரில் ரவா இட்லியை ஆர்டர் செய்து வாங்கி ஒரு இடத்தில் அமர்ந்துள்ளார். பிறகு வெடிகுண்டு டைமரை ஆன் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்குவது, ஓட்டலில் டிபன் வாங்குவது, ஒரு இடத்தில் உட்கார்ந்து பையை வைப்பது போன்ற காட்சிகள் எல்லாம் பதிவாகியிருப்பதால் குற்றவாளியை பிடிப்பது எளிதாக இருக்கும். விரைவில் அவரை கண்டுபிடித்துவிடுவோம். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அனைவரும் நலமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.