பெங்களூருவில் மேலும் ஒரு ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை
|ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்ததுபோல், கடம்பா ஓட்டலிலும் குண்டுகள் வைத்திருப்பதாக கடிதம் ஒன்று போலீஸ் நிலையத்திற்கு வந்தது.
பெங்களூரு,
பெங்களூருவில் கடந்த மார்ச் 1-ந் தேதி குந்தலஹள்ளி அருகே உள்ள 'ராமேஸ்வரம் கபே' ஓட்டலில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து 2 பயங்கரவாதிகளை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கிடையே பெங்களூருவில் மேலும் ஒரு ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 'கடம்பா' என்ற பெயரில் தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது. அதில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்ததுபோல், கடம்பா ஓட்டலிலும் நான் குண்டுகள் வைத்திருக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.
மேலும் அதில் போலீசார் குறித்து அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் உடனடியாக ஓட்டலை தொடர்பு கொண்டு எச்சரித்தனர். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் ஓட்டலுக்கு விரைந்தனர்.
பின்னர் ஓட்டலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிந்தது. இதையடுத்து கடிதம் பற்றியும், அதை அனுப்பிய மர்மநபர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு புரளியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது ஓட்டல் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.