< Back
தேசிய செய்திகள்
குக்கே சுப்பிரமணியா அருகே வனப்பகுதியில் பெங்களூரு மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

குக்கே சுப்பிரமணியா அருகே வனப்பகுதியில் பெங்களூரு மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
9 July 2023 12:15 AM IST

குக்கே சுப்பிரமணியா அருகே வனப்பகுதியில் பெங்களூருவை சேர்ந்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குக்கே பகுதியில் பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில், குக்கே சுப்பிரமணியா கோவில் அருகே தேவரகத்தே வனப்பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இதுபற்றி உடனடியாக சுப்பிரமணியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் தூக்கில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பெங்களூரு நெலமங்களாவை சேர்ந்த கங்கம்மா லட்சுமம்மா (வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஆன்மிக சுற்றுலாவாக குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு வந்ததும், சாமி தரிசனம் செய்துவிட்டு தேவரகத்தே வனப்பகுதிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுபற்றி அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்