வருகிற 2-ந் தேதி முதல் பையப்பனஹள்ளியில் இருந்து இயக்கம்: பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் புறப்படும் இடம் மாற்றம்
|வருகிற 2-ந் தேதி முதல் பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் புறப்படும் இடத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு-நாகர்கோவில் ரெயில்
கே.எஸ்.ஆர். பெங்களூரு (சிட்டி) ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையத்தில் இருந்து புறப்பட்டு, வந்து சேர உள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கே.எஸ்.ஆர். பெங்களூரு-நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17235) வருகிற 2-ந்தேதி முதல் பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும். நாகர்கோவில்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (17236) வருகிற 3-ந்தேதி முதல் சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்துக்கு காலை 9.10 மணிக்கு வந்து சேரும்.
திருப்பதி-பெங்களூரு
இதேபோல், கே.எஸ்.ஆர். பெங்களூரு-காக்கிநாடா-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (17209/10) வருகிற 1-ந்தேதி முதல் சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், சனிக்கிழமை) இயக்கிய கே.எஸ்.ஆர். பெங்களூரு-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (22618) வருகிற 3-ந்தேதி முதல் பையப்பனஹள்ளியில் இருந்து இயங்குகிறது. மறுமார்க்கமாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த திருப்பதி-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (22617) வருகிற 2-ந்தேதி முதல் பையப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் மேலும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
பயணிகள் அதிர்ச்சி
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ராஜாஜிநகர், ஸ்ரீராமபுரம், கே.பி.அக்ரஹாரா உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கே.எஸ்.ஆர். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்த ரெயில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்வது அந்த மக்களுக்கு அனுகூலமாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த ரெயில் புறப்படும் இடம் மற்றும் வந்து சேரும் இடம் பையப்பனஹள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளதால் தமிழக தென்மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், அந்த ரெயில், சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.