< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அறிவிப்பு பலகைகளை பொருத்த வேண்டும்- சுமலதா அம்பரீஷ் எம்.பி. பேச்சு
தேசிய செய்திகள்

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அறிவிப்பு பலகைகளை பொருத்த வேண்டும்- சுமலதா அம்பரீஷ் எம்.பி. பேச்சு

தினத்தந்தி
|
15 July 2023 10:24 PM GMT

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகள் நடப்பதை தடுக்க அறிவிப்பு பலகைகளை பொருத்த வேண்டும் என்று சுமலதா அம்பரீஷ் எம்.பி. கூறினார்.

மண்டியா, ஜூலை.16-

ஜல் ஜீவன் திட்டம்

மண்டியாவில் நேற்று ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமலதா அம்பரீஷ் எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சுமலதா அம்பரீஷ் பேசியதாவது:-

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். மாவட்டத்தில் 3 பிரிவுகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல இடங்களில் காண்டிராக்டர்கள் பணிகளை சரியாக செய்யவில்லை. இதனால் அவர்களை கருப்பு பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும்.

குடிநீர் வினியோகம்

கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும், மற்ற பணிகளுக்காக தண்ணீர் வினியோகிக்கவும் 2 குழாய் பாதைகள் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலாளர் ஜல் ஜீவன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த இன்னும் 30 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்.

இது சரியல்ல. குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையில் ஏராளமான விபத்துகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அதனால் விபத்துகள் நடப்பதை தடுக்க விரைவுச்சாலையில் அறிவிப்பு பலகைகள், மின்விளக்குகள் ஆகியவற்றை உரிய இடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்க கட்டணம் அதிகரிப்பு

விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை அமைக்கப்படும்போது ஒப்புக்கொண்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சம்பந்தப்பட்ட காண்டிராக்டர்கள் மூலம் அவற்றை செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் குமார்,ரவிக்குமார் எம்.எல்.ஏ. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ், வனத்துறை அதிகாரி ருத்ரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்