பெங்களூருவில் சிக்கிய கடத்தல் கும்பல்: 6 ஆண்டுகளில் 250 குழந்தைகள் விற்பனை.. பகீர் தகவல்
|குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஐவிஎஃப் மையங்கள், டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பச்சிளம் குழந்தையை விற்பனை செய்வதற்காக வாகனத்தில் வந்த கடத்தல் கும்பல் சிக்கியது. 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த கும்பல் பச்சிளம் குழந்தைகளை கொண்டு வந்து பெங்களூருவில் குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேலும் 3 பேர் சிக்கினர். மருத்துவமனை நடத்தி வரும் கெவின் மற்றும் முருகேஸ்வரி, ரம்யா ஆகியோரை கைது செய்தனர். இதில் கெவின் போலி டாக்டர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள ஐவிஎஃப் மையங்கள், டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக குழந்தையில்லா தம்பதியர்களுக்கு குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. 6 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதில், 50 முதல் 60 குழந்தைகள் வரை கர்நாடகாவிலும், மீதம் தமிழகத்திலும் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், 10 குழந்தைகள் விற்பனை தொடர்பான விவரங்கள் மட்டுமே காவல்துறைக்கு கிடைத்துள்ளன. மற்ற குழந்தைகளின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழை பெண்கள் கருவை கலைக்க வருவதாக தெரியவந்தால், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், சில மருத்துவமனைகள் உதவியுடன் முழுமையான தகவலை அறிந்துகொண்டு, அந்த பெண்களை சந்தித்து பேசுகின்றனர். அவர்களிடம் குழந்தைகளை விற்பனை செய்ய சம்மதிக்க வைக்கின்றனர். மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்வதுடன், குழந்தை பெற்ற பிறகு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கி, குழந்தையில்லா தம்பதியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுதவிர ஏழை பெண்களின் கரு முட்டைகளையும் வாங்கி விற்பனை செய்கிறார்கள்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாலட்சுமி என்ற பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண் 2015-17 காலகட்டத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் மாதம் 8,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது ஒரு பெண் அவரை அணுகி, கர்ப்பம் தரிக்க முடியாத பெற்றோருக்கு கருமுட்டை தானமாக கொடுத்தால் 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார். இப்படி ஒரே நாளில் பெரிய தொகை கிடைத்ததால், இதையே தொழிலாக தொடங்கியிருக்கிறார் மகாலட்சுமி.
எனவே, சட்டவிரோத வாடகைத் தாய்கள், இந்த மோசடிக்கு உதவியாக இருக்கும் மருத்துவமனைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இதன்மூலம் குழந்தை கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.