< Back
தேசிய செய்திகள்
கடலில் தவறி விழுந்து பெங்களூரு டாக்டர் பலி
தேசிய செய்திகள்

கடலில் தவறி விழுந்து பெங்களூரு டாக்டர் பலி

தினத்தந்தி
|
5 Sept 2023 12:15 AM IST

தட்சிண கன்னடாவில் கரையில் உள்ள பாறைகளை பிடித்து நடந்து சென்றபோது கடலில் தவறி விழுந்து பெங்களூரு டாக்டர் ஒருவர் பலியானர்.

மங்களூரு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோமேஸ்வரா பகுதியில் கடற்கரை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த கடற்கரைக்கு 5 டாக்டர்கள் வந்தனர்.

அவர்கள் பெங்களூரு ராம்நகரைச் சேர்ந்த டாக்டர்கள் ஆசிக், பிரதீஷ், பயிற்சி பெண் டாக்டர்கள் 3 பேர் ஆவர். அவர்கள் அனைவரும் கரையில் நின்று கடலின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் கரையோரம் இருந்த பாறைகள் வழியாக நடந்து சென்றபடி கடலின் அழகை ரசித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் டாக்டர்கள் ஆசிக் மற்றும் பிரதீஷ் ஆகியோர் கால் தவறி கடலில் விழுந்தனர். அதில் டாக்டர் ஆசிக் பாறையை பிடித்துக் கொண்டார். பிரதீஷ் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்த பயிற்சி பெண் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இதுபற்றி உல்லால் போலீசார் மற்றும் கடலோர காவல் படை குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் மற்றும் கடலோர காவல் படை குழுமத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் டாக்டர் ஆசிக்கை பத்திரமாக மீட்டனர். பின்னர் டாக்டர் பிரதீசை தேடினர்.

நேற்று அதிகாலையில் டாக்டர் பிரதீஷ் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்