பா.ஜனதாவுக்கு எதிரான அவதூறு பிரசாரம்: ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேரில் ஆஜராக சம்மன்
|கர்நாடக பா.ஜனதா செயலாளர் சிவபிரசாத், பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு(2023) மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜனதா அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இதுதொடர்பாக சுவரொட்டி, விளம்பரம் உள்பட பல்வேறு வழிகளில் அவர்கள் பிரசாரம் செய்தனர். இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது.
இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா செயலாளர் சிவபிரசாத், பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு அந்த கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ஜனதா சார்பில் வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் அவர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்.
இதுகுறித்து பா.ஜனதா சார்பில் ஆஜரான வக்கீல் வினோத்குமார் கூறுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை கூறினர். இதனால் அக்கட்சி, தேர்தலில் 30 முதல் 40 இடங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுகுறித்து மன்னிப்பு கேட்குமாறு நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் காங்கிரசார் மன்னிப்பு கேட்கவில்லை. எங்களின் வாதத்தை ஏற்று காங்கிரஸ் தலைவர்களுக்கு நேரில் ஆஜராகும்படி கூறி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது' என்று கூறினார்.